புதுக்கோட்டை: இந்திய அரசு மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகத் தமிழக அரசு குற்றஞ்சாட்டிவரும் நிலையில், வடமாநிலங்களில் ஒருமொழிக் கொள்கைதான் நடப்பிலிருந்து வருகிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்காவிடில் தமிழகத்திற்கான கல்வி நிதியைத் தரமாட்டோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் தெரிவித்ததை அடுத்து, சர்ச்சை வெடித்தது.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது.
அது இந்தியைத் திணிப்பதற்கான மறைமுக முயற்சியே எனக் குறிப்பிட்ட தமிழக அரசு, தங்கள் மாநிலத்தில் எப்போதும்போல இருமொழிக் கொள்கையே தொடரும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாததால் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய கல்வி நிதியைத் தரமாட்டோம் என்று கூறுவதற்கு அரசியல் நோக்கமே காரணம் என்று திரு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வியாழக்கிழமை (மார்ச் 13) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வடஇந்திய மாநிலங்களில் ஒருமொழிதான் அமலில் இருக்கிறது என்று நான் குற்றஞ்சாட்டுகிறேன். பேச்சுமொழி, பயிற்சிமொழி, பாடமொழி என எல்லாமே அங்கு இந்தி மட்டுந்தான். அரசுப் பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களை நியமிப்பதே கிடையாது. ஆனால், ஆங்கிலமே இரண்டாவது மொழி எனப் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆங்கிலத்திற்கே ஆசிரியர்கள் இல்லாதபோது அங்கு தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை,” என்றார்.
தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருந்தாலும், அங்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படுவது இல்லை என்ற திரு சிதம்பரம், அப்பள்ளிகளில் முதல் மொழியாக ஆங்கிலமும் இரண்டாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதமும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“இவா்கள் எந்த முகத்தோடு வந்து தமிழ்நாட்டு மக்களைப் பாா்த்து, தமிழ்நாட்டு அரசை பாா்த்து நீங்கள் மும்மொழித் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று சொல்கிறாா்கள்,” என்றும் திரு சிதம்பரம் கேட்டுள்ளார்.