தஞ்சாவூர்: இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு பெட்ரோல் நிரப்பும் நிலையம் ஒன்று, ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 50க்கு விற்பனை செய்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள ஆடுதுறையில் இருக்கும் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளர் மோகனசுந்தரம், குடியரசு நாளான ஜனவரி 26ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வரும் அனைவருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 50க்கு விற்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதுபோல், அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு 500க்கும் மேற்பட்ட மக்கள், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று பெட்ரோலை நிரப்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதனால், அப்பகுதியில் சிறிதுநேரத்திற்குப் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தியாவில், ஜனவரி 26ஆம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

