திண்டுக்கல்: ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள புகையிலைப்பட்டி பகுதியில் புதன்கிழமை (பிப்ரவரி 11) நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இம்முறை பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் அதிகமான காளைகளும் 400க்கும் மேற்பட்ட வீரர்களும் களமிறக்கப்பட்டதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது.
வீரர்களில் ஒருவராகக் களமிறங்கிய 24 வயதான பாலகுருவும் ஒருவர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த அவர், சீறிவந்த காளைகளைத் துணிச்சலாக எதிர்கொண்டார். அப்போது ஒரு காளை அவரது கழுத்தில் முட்டியது.
இதில், தொண்டையில் படுகாயம் அடைந்த அவரை, உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர், மேல் சிகிச்சைக்காக பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பாலகுரு பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது.
பாலகுருவைத் தவிர மாடுகள் முட்டியதில் வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 33 பேர் காயமடைந்தனர்.
போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் வீரர்களுக்கும் கட்டில், குத்து விளக்கு, குக்கர், மின்விசிறி, சைக்கிள், தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

