தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் ரூ.22.10 கோடி இணைய மோசடி

தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் ரூ.22.10 கோடி இணைய மோசடி

முதல்வர் விஜய்க்கு பாஜக கண்டனம், காவல்துறை தீவிர விசாரணை
கோப்புப் படம்: தினமணி

10 Nov 2026 - 7:24 pm

2 mins read

சென்னை/புதுடெல்லி: தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.22.10 கோடி திருடப்பட்ட சம்பவத்தில் நிர்வாகச் சீர்கேடு நிலவுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பாஜக, முதலமைச்சர் விஜய் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கிராமப்புறங்களில் சுகாதார நல மையங்கள் அமைப்பதற்கும் சாலை, குடிநீர் பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதியே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி, நாகப்பட்டினத்தில் ரூ.3.10 கோடி, திருப்பூர் தாராபுரத்தில் ரூ.5 கோடி என மொத்தம் ரூ.22.10 கோடி மாயமாகியுள்ளது.

இதற்கு முதல்வர் விஜய்யின் தவெக அரசே காரணம் என பாஜக தலைவர் வினோஜ் செல்வம் எக்ஸ் தளத்தில் சாடினார்.

மக்கள் வரிப்பணத்தைக் காக்கத் தவறியதாகவும், நிதிப் பாதுகாப்புக் கண்காணிப்புகள் எங்கே போயின என்றும் வினவிய அவர், ஹேஷ்டேக் பிரபலப்படுத்துவதற்கும் அரசை நடத்துவதற்கும் வித்தியாசம் உண்டு என விமர்சித்தார்.

இவ்விவகாரத்தை சென்னை இணையக்குற்றத் தடுப்பு காவல்துறை விசாரித்து வருகிறது.

ஊராட்சிச் செயலாளர்கள் ஒப்பந்ததாரர்களுக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும் இணையத்தளப் பாதுகாப்பு குறைபாட்டைப் பயன்படுத்தி, தரவுகளை ஊடுருவி நிதி மாற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

பங்களாதேஷ், அமெரிக்கா, கிரீஸ் ஆகிய நாடுகளிலிருந்து இணைய ஊடுருவல் நடந்ததற்கான ஐபி முகவரித் தடயங்கள் கிடைத்துள்ளன.

வெளிநாட்டுக் குற்றவாளிகளுக்கு இந்தியாவில் உள்ள இடைத்தரகர்கள் உதவி செய்திருக்கலாம் எனவும், நைஜீரிய மோசடிக் கும்பலுக்குத் தொடர்பிருக்கலாமா எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

புதுச்சேரி மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரியின் 260 பணியாளர்களின் ஊதிய நிதியான ரூ.8.85 கோடி இதேபோன்று மாயமான வழக்கில் சிலர் கைதாகியுள்ள நிலையில், இரு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா எனவும் விசாரிக்கப்படுகிறது.

இணையத்தளப் பாதுகாப்புத் தொழில்நுட்பக் குழுவினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பணத்தை மீட்பதில் சவால்கள் நிலவும் சூழலில், பொது நிதியைப் பாதுகாக்கத் தமிழக அரசு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக கோரியுள்ளது.

குறிப்புச் சொற்கள்