சென்னை: இணைய விளையாட்டுகளால் உடல், மன ரீதியாக மாணவர்களின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும்விதமாக, தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் சார்பாக சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொழில் வளர்ச்சியைத் தடுக்க இயலாது என்றும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம் என்றும் தலைமைச் செயலாளர் அப்போது குறிப்பிட்டார்.
“இணையவழி விளையாட்டுகள் மாணவர்களை இயற்கைக்கு மாறாக மாற்றுகின்றன. இதனால் மாணவர்கள் நிழல் உலகில் வாழ்வது போன்ற சூழல் உருவாகிறது.
“சீனா, ஜப்பானில் இளையர்கள், இளஞ் சிறார்களுக்கு இணையவழி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன,” என்றார் திரு.முருகானந்தம்.
இணையவழி சூதாட்டம், விளையாட்டுகளின் தீமை கருதி அவற்றைத் தடுக்கும் வகையில், நாட்டில் முதன்முறையாக தமிழக அரசுதான் சட்டம் உருவாக்கியது என்று குறிப்பிட்ட அவர், இதுபோன்ற சட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்றார்.
மாணவர்கள் மத்தியில் இணையவழி விளையாட்டுகள் மீதான மோகம், அடிமைத்தனம் மிக அதிக அளவில் பரவி வருவதாகவும் இது மனநிலை சார்ந்த குறைபாடாகவும் மாறி வருகிறது என்றும் தலைமைச் செயலாளர் கவலை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இளைய சமுதாயத்தினரிடம் இது ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதை தவிர்ப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.
“கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் இணையவழி கல்விக்கு மாறிய போதுதான் இந்தப் பழக்கம் அதிகமானது,” என திரு.முருகானந்தம் மேலும் தெரிவித்தார்.

