27 மெட்ரோ ரயில் நிலையங்களில் 55 நகரும் படிக்கட்டுகள் திறப்பு

27 மெட்ரோ ரயில் நிலையங்களில் 55 நகரும் படிக்கட்டுகள் திறப்பு

புதிய வசதியைப் பயணிகள் திறந்து வைத்தனர்
படம்: இந்து தமிழ் திசை

15 May 2026 - 8:34 pm

2 mins read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், கூடுதலாக அமைக்கப்பட்ட 55 நகரும் படிக்கட்டுகள் வெள்ளிக்கிழமை (மே 15) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.

பொதுவாக அரசுத் திட்டங்களை அமைச்சர்கள் அல்லது உயர் அதிகாரிகள் திறந்து வைப்பதே வழக்கமாக உள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு மாற்றமாக மெட்ரோ பயணிகளைக் கொண்டே இந்த புதிய நகரும் படிக்கட்டுகளைத் திறந்து வைத்து கௌரவித்தது.

இந்த நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்யா மற்றும் பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பான, விரைவான பயணம் என்பதால், நாள்தோறும் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் நெரிசலைக் குறைக்கவும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காகவும் இந்தக் கூடுதல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிதாகத் திறக்கப்பட்ட 55 படிக்கட்டுகளையும் சேர்த்து, தற்போது சென்னை மெட்ரோவில் உள்ள மொத்த நகரும் படிக்கட்டுகளின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.

“இயங்கிக் கொண்டிருக்கும் ரயில் நிலையங்களில் இந்தப் புதிய படிக்கட்டுகளை நிறுவுவது பெரும் சவாலாக இருந்தது.

“இருப்பினும், பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், ரயில்கள் இயங்காத நள்ளிரவு நேரங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன,” என்று மெட்ரோ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

இந்தக் கூடுதல் வசதி, அலுவலகம் செல்வோர், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்