தவணை முறையில் தேர்தல் அறிக்கை வெளியிடும் எதிர்க்கட்சிகள்: ஸ்டாலின்

தவணை முறையில் தேர்தல் அறிக்கை வெளியிடும் எதிர்க்கட்சிகள்: ஸ்டாலின்

2 mins read
6ff28fdf-2f1d-4eee-937c-e8194dcb8a45
முதல்வர் ஸ்டாலின். - படம்: இந்தியா டுடே

சென்னை: திமுகவின் திட்டங்களை காப்பி அடித்து எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளைத் தயாரித்து வருகின்றன என்றும் அதற்காகத்தான் தவணை முறையில் தேர்தல் அறிக்கையை விடுக்கின்றன என்றும் தமிழக முதல்வரும் அக்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் திங்கட்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற திமுகவின் 12வது மாநில மாநாட்டில் பேசிய அவர், புதிதாக எந்தவொரு ஏவல் அமைப்பை அழைத்து வந்தாலும் திமுக அதை தமிழகத்துக்குள் அனுமதிக்காது என்றார்.

திமுக கொள்கைக்காகக் கூட்டணி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவுக்கு திருச்சி என்றாலே எழுச்சி, திருச்சி என்றாலே மகத்தான வெற்றி என்றார்.

“அதிமுக ஆட்சியில் 2,045 புதுத்தொழில்கள் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சியில் 13,500க்கும் அதிகமான ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன,” என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

49 லட்சம் பேருக்கான மருத்துவக் காப்பீட்டை 90 லட்சமாக உயர்த்தியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு போன்ற, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களைப் பட்டியலிட்டார்.

“2021 தேர்தலுக்கு முன் 7 இலக்குகளுக்கு உறுதி அளித்தேன். அதை நிறைவேற்றியதால் மக்கள் மகிழ்வோடு உள்ளனர்.

“அதிமுக ஆட்சியில் 471 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், திமுக ஆட்சியில் 1,190 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“அதிமுக ஆட்சியில் ரூ. 4.13 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. திமுக ஆட்சியில் 3 மடங்கு அதிகரித்து ரூ. 13.57 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது,” என்றார் திரு ஸ்டாலின்.

தமிழகம் திமுகவை நம்பியே உள்ளது என்றும் திமுகவும் தமிழகத்தை மட்டுமே நம்பி உள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு முதன்மை மாநிலம் என மத்திய அரசே கூறியுள்ளதாகவும் தமிழகம்தான் ‘சூப்பர் ஸ்டார்’ மாநிலம் என பத்திரிகைகள் பாராட்டுவதாகவும் திரு ஸ்டாலின் தெரிவித்தார்.

“தமிழகத்தைக் காத்தவர்கள் நாம். கல்லக்குடி போராட்டம் நடைபெற்றது திருச்சியில்தான். அண்ணா, பெரியார் ஒரே சிறையில் இருந்தது திருச்சியில்தான்.

“ஏழு முறை மட்டுமல்ல, எந்நாளும் தமிழகத்தை திமுக ஆள வேண்டும் என்று சூளுரைப்போம்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்