ஓபிஎஸ்: அதிமுக ஒன்றிணைவதைத் தடுக்கவே அதிமுக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு

ஓபிஎஸ்: அதிமுக ஒன்றிணைவதைத் தடுக்கவே அதிமுக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு

2 mins read
975062f1-b029-42db-8492-93fc26d28700
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: பிரிந்துகிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கும் முயற்சி வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தால் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் மீது திமுக லஞ்ச ஊழல் புகார் சுமத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, வாகன வரி உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, முத்திரைத் தாள் கட்டண உயர்வு என எந்தெந்த வழிகளில் எல்லாம் மக்கள்மீது கூடுதல் சுமையை ஏற்ற முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் சுமையேற்றி வருகிறது. அந்த வகையில் மக்களிடம் திமுக ஆட்சி மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

“ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற இயக்கத்தின் அடிப்படையில் அதிமுகவை எப்பாடுபட்டாவது ஒன்றிணைக்க வேண்டும் என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஈடுபட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வந்தன.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் இரா. வைத்திலிங்கம் 2025ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணையும் என்று சில நாள்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைந்து விடுமோ என்கிற அச்சத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் மீது திமுக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இப்போது முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் மீது திமுக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்