தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய ஓபிஎஸ்

2 mins read
1daaa3a3-2897-468a-a39b-4b3c7037163a
பூங்காவில்  நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, முதல்வர் ஸ்டாலினும் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்தனர். - படம்: ஊடகம்

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு வெளியேறியது.

இதனை அக்குழுவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிகளை முடிவு செய்வதில் அரசியல் கட்சிகள் முனைப்பாக உள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்ததை அடுத்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இக்கூட்டணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை (ஜூலை 31) தன் ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை மேற்கொண்ட ஓபிஎஸ், அதன் பின்னர் அவரும் பண்ருட்டி ராமச்சந்திரனும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு இடம்பெற்றிருந்தது. ஆனால், இன்று முதல் அந்தக் கூட்டணியுடன் உறவை முறித்துக் கொண்டது.

“குழுவின் தலைவர் ஓபிஎஸ் விரைவில் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தற்போதைய சூழலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது,” என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். அவ்வாறு நேரம் ஒதுக்கப்படாததால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசிய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள பூங்காவில் திரு ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, ஓ.பன்னீர்செல்வமும் அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் விசாரித்ததாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் தேமுதிக முக்கியமான நிர்வாகிகள் சென்றிருந்தனர். முதல்வரின் இல்லத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்