மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும்: ஓபிஎஸ்

மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும்: ஓபிஎஸ்

2 mins read
4105dd90-30ad-4603-a8b3-2036cedc3651
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். வலக்கோடியில் இருப்பவர் திரு பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். - படம்: தினமணி

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 20ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும். திமுகவின் நல்லாட்சி தொடர வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், ஸ்டாலினுடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து யாருடன் கூட்டணி என்ற முடிவை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்காமல் இருந்த நிலையில், அவரின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மட்டும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

திரு பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தும் உடன் சென்றிருந்தார்.

ஏற்கெனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ஓபிஎஸ்சின் சந்திப்பானது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு நாட்களில் அவர், திமுகவில் இணைவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.பன்னீர்செல்வம், “மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் அறிவர். தமிழ்நாட்டுக்கே வழி பிறந்துள்ளது. ஸ்டாலினின் ஐந்தாண்டுகால ஆட்சி நிறைவு பெற்றதற்கு வாழ்த்தினேன். மக்கள் மனதில் இருப்பதையே என் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பேசினார்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்