சென்னை: தமிழகத்தில் தற்போது 23,180 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய பதிவு செய்துள்ளதாகத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் ‘உடல் உறுப்பு தான தினம் - 2025’ நிகழ்வு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய மா.சுப்பிரமணியன், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டால் அவருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 522 பேரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது, கடந்த 2024ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய 268 குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு தானம் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், உறுப்பு தானம் பெறாத 11 அரசு மருத்துவமனைகள்மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக நாகை, கரூர், சிவகங்கை, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு ஒரு முயற்சிகூட எடுக்காதது வருத்தம் அளிப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் சுட்டிக்காட்டினார்.
“இந்த நான்கு மருத்துவமனைகளுடன் திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், ஓமந்தூரார் அரசுப் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, கிண்டி அரசுப் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் பெற எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
“அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் உடல் உறுப்புகளைத் தானம் பெற்றன என்ற நிலையை அடுத்த ஆண்டாவது அடைய வேண்டும்,” என்று அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், கடந்த ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளதாகப் பாராட்டு தெரிவித்தார்.
“தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதன் பலனாக, மாநிலம் முழுவதும் தற்போது 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.