ஓசூர்: தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக ஓசூர்- நந்திமங்கலம் சாலைத் தரைப்பாலம் ரசாயனக் கழிவு நுரையால் மூழ்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை உள்ளது. இதன் நீர் பிடிப்புப் பகுதியான கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.
அதனால், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. புதன்கிழமையன்று அணைக்கு வினாடிக்கு 1,670 கன அடி நீர் வந்தது. இந்த நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் மழை மேலும் தீவிரமடைந்துள்ளதால், புதன் இரவு அணைக்கு அதிக நீர்வரத்து இருந்ததால் தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2,220 கன அடி நீர் திறக்கப்பட்டது.
அதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஓசூர் - நந்திமங்கலம் சாலையில் அமைந்துள்ள தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தை தண்ணீரும் ரசாயனக் கழிவும் கலந்த வெள்ளை நுரை மூழ்கடித்து விட்டது.
அதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், “திடீரென அதிகப்படியான தண்ணீரைத் திறந்துவிடும்போது, தரைப்பாலம் வழியாகச் செல்லும் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
“மேலும் இதுபோன்று தண்ணீரும் ரசாயனக் கழிவும் கலந்த வெள்ளை நுரை பாலத்தை மறைப்பதால் மக்கள் சுமார் 10 கி.மீட்டர் தூரம் சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
“எனவே, வெள்ளப்பெருக்கு காலங்களில் பொதுமக்கள் சிரமமின்றி செல்ல தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தை உயர்மட்டப் பாலமாக மாற்றி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால், எந்த அரசு வந்தாலும் எங்களது கோரிக்கையை கவனிக்க மறுக்கின்றது. இனியாவது தமிழக அரசு தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தை உயர்மட்டப் பாலமாக அமைக்க நிதி ஒதுக்கி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று கூறினர்.