திருப்பூர்: தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சாலையோரக் குப்பையில் 300க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் நடந்து சென்றவர்கள் சாலையோரத்தில் தேங்கிக் கிடந்த குப்பைகளுக்கு இடையே தபால் உறைகளுடன் ஏராளமான ஆதார் அட்டைகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து, அது குறித்து உடனடியாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் பெரும்பாலானவை பள்ளி மாணவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்களின் பெயர்களில் அஞ்சல் துறை மூலம் விநியோகிக்கப்பட வேண்டியவை எனக் கூறப்படுகிறது.
அவை திருப்பூர் மாவட்டத்தின் மற்றொரு பகுதியான அவிநாசியைச் சேர்ந்தவர்களின் முகவரிகளைக் கொண்டிருந்தன. அவிநாசிப் பகுதி மக்களுக்குச் சேர வேண்டிய முக்கியமான அடையாள ஆவணங்கள், பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்லடம் பகுதியில் குப்பையில் எவ்வாறு வந்தன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
அஞ்சல் ஊழியர்களின் அலட்சியப்போக்கு காரணமாகவே அந்தச் சம்பவம் நடந்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படும் வேளையில், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளும் குப்பையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
