சென்னை: தேர்தல் நடைபெற்ற 234 தொகுதிகளில் 85.15 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில் 45 தொகுதிகளில் அந்த விகிதம் 90 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.
தமிழகச் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் 234 தொகுதிகளிலும் இம்மாதம் (ஏப்ரல்) 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்முறை 85.15 விழுக்காடு வாக்குகள் பதிவாயின.
45 தொகுதிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குகள் பதிவாயின.
தமிழகத்திலேயே அதிகபட்சமாகக் கரூர் தொகுதியில் 93.41 விழுக்காட்டு வாக்குகளும் வீரபாண்டியில் 93.36 விழுக்காட்டு வாக்குகளும் பதிவாகியுள்ளன. கரூரில் மொத்தம் உள்ள 2.29 லட்சம் வாக்குகளில் 2.14 லட்சமும் வீரபாண்டியில் மொத்தம் உள்ள 2.50 லட்சம் வாக்குகளில் 2.33 லட்சமும் பதிவாகின.
மாவட்ட அளவில் அதிகபட்சமாகக் கரூரில் 92.65 விழுக்காட்டு வாக்குகளும் குறைந்தபட்சமாகக் கன்னியாகுமரியில் 75.55 விழுக்காட்டு வாக்குகளும் பதிவாகின.
இவை தவிர, 151 தொகுதிகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாகவும் 37 தொகுதிகளில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமாகவும் வாக்குகள் பதிவாகின.
தொடர்புடைய செய்திகள்
70 விழுக்காட்டுக்குக் கீழ் (68.90%) வாக்குகள் பதிவான ஒரே தொகுதி பாளையங்கோட்டை.
சென்னை மாவட்டத்தில் 83.71 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக ஆர்.கே.நகரில் 90.56 விழுக்காட்டு வாக்குகளும் குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 74.84 விழுக்காட்டு வாக்குகளும் பதிவாகின. முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில் 86.12 விழுக்காட்டு வாக்குகளும் விஜய் போட்டியிட்ட பெரம்பூரில் 89.74 விழுக்காட்டு வாக்குகளும் பதிவாகின.

