தவெக அரசை ஆதரிக்க அக்கட்சியின் கொள்கைகளே போதும்: ப.சிதம்பரம்

தவெக அரசை ஆதரிக்க அக்கட்சியின் கொள்கைகளே போதும்: ப.சிதம்பரம்

படம்: இந்து தமிழ் திசை

11 Jun 2026 - 7:11 pm

2 mins read

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பதற்கு அந்தக் கட்சி கொண்டுள்ள கொள்கைகளில் இரண்டு கொள்கைகளே போதும். அதாவது, ஒன்று சமயச் சார்பின்மை, மற்றொன்று மாநில உரிமையைப் பாதுகாத்தல். இவ்வாறு காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சமயச் சார்பின்மை, மாநில உரிமைகள் என்ற அடிப்படையான கொள்கைகளிலிருந்து விலகாத வரை தவெகவை ஆதரிப்பதில் எவ்விதத் தவறும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

தவெக ஆட்சிக்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அதனையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தங்களுடைய ஆதரவைத் தந்துள்ளன. இப்போதைய அரசாங்கம் நிலையான அரசாக நல்லாட்சியைத் தர வேண்டும் என வாழ்த்துவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நானோ, காங்கிரஸ் கட்சியோ, ஊடகங்களோ, கருத்துக்கணிப்போ என யாரும் எதிர்பார்க்காத வகையில், தமிழக வெற்றிக் கழகம் ஏறத்தாழ 35 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்ததற்கு எனது பாராட்டுகள். தவெகவுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள்,” எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ‘குடும்பத்தில் ஒரு வாக்காவது தவெகவுக்கு விழுந்துள்ளது. அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக எனது பார்வையில், நகர்ப்புற பகுதிகளில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது தவெக. அதாவது, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் பெரிய வெற்றியை அக்கட்சி பெற்றுள்ளது,” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

எனவே, இந்த அரசு இளைஞர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி, அவர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள், கல்வி மற்றும் தொழில் திட்டங்களை வரையறுத்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்