பாலமேடு ஜல்லிக்கட்டு: வெற்றிபெற்ற காளையின் உரிமையாளருக்கு பசு மாடு பரிசு

1 mins read
18f88621-c300-471f-bf84-1b4d8b2bd744
வெற்றிபெற்ற காளையின் உரிமையாளருக்கு காங்கேயம் இன நாட்டுப் பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது. - படம்: தினமணி

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்ற 1,000 காளைகளை அடக்க 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டாலும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றவை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி அளவில் பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. வீரர்கள் உறுதி மொழி ஏற்ற பின்னர் போட்டி தொடங்கப்பட்டு, காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இந்த முறை போட்டியில் சிறப்பாக களமாடி பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் காளை உரிமையாளருக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசு அளிக்கப்படும் என்றும் சிறந்த மாடு‌பிடி வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் காளைகளை விரட்டினர். இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

மேலும் சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்ட காளையின் உரிமையாளருக்கு தனியார் பால் நிறுவனம் சார்பாக காங்கேயம் இன நாட்டுப் பசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்