முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தேன்: செங்கோட்டையன்

முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தேன்: செங்கோட்டையன்

2 mins read
4f140b73-c71a-4346-a957-f65531d21986
செங்கோட்டையன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

கோபிசெட்டிபாளையம்: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலராகவும் தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்தபோது, அதை ஏற்காமல் எடப்பாடி பழனிசாமி பெயரைத் தாம் முன்மொழிந்ததாகக் கூறியுள்ளார் செங்கோட்டையன்.

தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர், தமது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது, தமிழகத்தில் ஏற்கெனவே ஆட்சி செய்தவர்கள்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமா? புதிய தலைமுறை உருவாக வேண்டாமா? என்று செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

திரைப்படத்தில் நடித்தால் தவெக தலைவர் விஜய்க்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் அதை உதறிவிட்டு மக்கள் பணியாற்ற வந்துள்ளார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தை விஜய் அமைதிப் பூங்காவாக மாற்றுவார், தூய்மையான மக்களாட்சியை வழங்குவார் எனக் குறிப்பிட்ட அவர், விஜய் மூலம் இளையர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தமக்கு கிடைத்துள்ளது என்றார்.

“பழனிசாமியை பொதுச்செயலாளராக, முதல்வராக நான் முன்மொழிந்தேன். ஆனால், அவரிடம் சமத்துவம், மனிதநேயம் இல்லை.

“50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் எனது உழைப்பு குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால், சாதாரண தொண்டராகக்கூட கட்சியில் நீடிக்கக் கூடாது என என்னை நீக்கினார். உடன் இருப்பவர்களையும் நீக்கினார்.

“துக்கம் விசாரிக்கச் சென்றபோது என்னைச் சந்தித்தவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பழனிசாமி அடுத்து ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“விஜய்தான் ஆட்சிக்கு வரப்போகிறார். டிசம்பர் மாதத்துக்குள் தவெக கூட்டணி வலிமையாகும். பல முன்னாள் அமைச்சர்களும் எங்களுடன் இணைவார்கள்,” என்றார் செங்கோட்டையன்.

குறிப்புச் சொற்கள்