சென்னை: மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்திய விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
“இதில் ஒரு மாணவருக்கு கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், மற்றொரு மாணவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. பள்ளி மாணவர்கள் இடையே கத்திக் குத்து, புத்தகப் பையில் அரிவாள், அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு. “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்ற புகழோடு அதிமுக ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டை, ‘ஸ்டாலின் மாடல்’ அரசு இட்டுச்சென்றுள்ள நிலை இதுதான்.
“நான் அரசியல் ரீதியான விமர்சனங்கள் வைத்தால் மட்டும் பாய்ந்து வந்து வீர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன்? படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல!
“நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். ஆயுதங்கள், வெடிகுண்டு என தமிழ்நாட்டை கொலைக் களமாக மாற்றி வரும் திமுக ஆட்சியிடம் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்,” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.