காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக ஏகனாபுரம் உள்ளிட்ட பல கிராமங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சுதந்திர தினத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், அந்தச் சுற்றுவட்டார மக்கள் பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் மனுக்களைக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஏகனாபுரத்தில் முதல் கட்டமாக 152.95 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதையடுத்து ஏகனாபுரம் மக்கள், அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக 60 பெண்கள் உட்பட 125 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் பலரும் ஏகனாபுரம் மக்கள் மீது வழக்குப் பதிவு செய்ததற்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை மொத்தமாக வெளியிடாமல் பகுதி பகுதியாக அரசு சார்பில் வெளியிட்டு வருகின்றனர்.
இது மக்கள் மொத்தமாக ஒன்றிணைந்து போராடுவதைத் தடுப்பதற்கான உத்தி என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்த ஏகனாபுரத்தில் நாளை (செப்டம்பர் 3) இது தொடர்பாக கூடி ஆலோசிக்க உள்ளனர்.