காஞ்சிபுரம்: பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு நடைபெற்று வரும் போராட்டம் 1,000வது நாளை எட்டவுள்ளது.
போராட்டக் குழுவினர் அடுத்தகட்டமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் அமைக்கப்பட உள்ள விமான நிலையத்தை எதிர்த்து பொதுமக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை இடைவிடாமல் நடத்தி வருகிறார்கள்.
விமான நிலையப் பணிகளுக்காக பரந்தூர், அதைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்பதே இம்மக்களின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது.
ஏறக்குறைய ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.
மக்கள் போராட்டம் 966 நாள்களைக் கடந்துள்ள நிலையில், தமிழக அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் பசுமை விமான நிலையப் பணிகள் வேகம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தை முன்னெடுத்து வரும் பரந்தூர், ஏகனாபுரம் கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆயிரமாவது நாளை நோக்கிச் செல்லும் இந்தப் போராட்டம் குறித்து போராட்டக் குழுவினர் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் பகுதியில் விமான நிலையம் வராது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். தமிழக அரசு விமான நிலையம் விரைவுபடுத்தப்படும் என்று கூறினாலும் நிதி எதுவும் ஒதுக்கவில்லை.
“ஏப்ரல் 20ஆம் தேதியுடன் மக்கள் போராட்டத்தின் 1,000வது நாள் நிறைவடைகிறது. அன்றைய தினம் சென்னையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்புடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தப்படும்.
“அதன் பிறகும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளோம்,” என்றார் இளங்கோவன்.