சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுத, பயிற்சி அளிப்பதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் சுருட்டி ஏமாற்றிய கும்பலுக்குக் காவல்துறை வலைவீசியுள்ளது.
இந்தக் கும்பல் ஐஐடி பயிற்சி நிலையம் நடத்துவதாகக் கூறியும் மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது தெரியவந்தது.
தலைமையகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் இப்பயிற்சி மையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“இந்தப் பயிற்சி நிலையம் ஓரளவு பிரபலமானது. நீட், ஐஐடி தேர்வுக்குப் பயிற்சி அளித்து வருவதால் மாணவர்களும் பெற்றோரும் நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி உள்ளனர். ஆனால், திடீரெனப் பயிற்சி நிலையத்தை மூடியதால் பாதிக்கப்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்,” என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு, கேரளாவில் செயல்பட்டு வரும் இந்தப் பயிற்சி நிலையத்தின் தலைவர் அங்கூர் ஜெயின், மற்ற இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 140 மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மொத்தம் ரூ.4 கோடி அளவுக்குப் பண மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒருங்கிணைந்த பயிற்சி என்ற அடிப்படையில் இந்தத் தனியார் பயிற்சி நிலையம் தனது மோசடியை அரங்கேற்றி உள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டதால் பணம் செலுத்திய பெற்றோர் பரிதவிப்பில் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இத்தனியார் பயிற்சி நிலையங்களின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்குப் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் திடீரென அந்நிலையங்கள் மூடப்பட்டன.
தமிழகத்தில் மட்டும் ஆறு பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது.