தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசுப் பள்ளியில் வகுப்பில் பேசிய மாணவர்களின் வாயில் ‘டேப்’: நடவடிக்கை கோரி பெற்றோர் மனு

2 mins read
bc17fb86-c6f4-4641-a745-dc0f5593402d
அய்யம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் திங்கட்கிழமை புகார் அளித்தனர். - படம்: தி இந்து

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் வகுப்பறையில் பேசாமல் இருப்பதற்காக மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், “ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி 4ஆம் வகுப்பில் படிக்கும் 5 மாணவர்களின் வாயில் ‘செல்லோ டேப்’ ஒட்டி 2 மணி நேரமாக உட்கார வைத்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு, அவர் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன், “அக்டோபர் 21ஆம் தேதியன்று அந்த வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், ஒரு மாணவரை வகுப்பறையைக் கவனித்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர். அந்த மாணவர்தான், வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டியுள்ளார். ஆசிரியர்கள் யாரும் ஒட்டவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தர வட்டாரக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியை புனிதாவிடம் கேட்டபோது, ‘‘வகுப்பில் யாரும் பேசக் கூடாது என்பதற்காக வாயில் ‘செல்லோ டேப்’ ஒட்டியுள்ளனர். பின்னர், அந்த வகுப்புக்கு நான் சென்றபோது, ஒரு மாணவரின் வாயில் மட்டும் ‘டேப்’ ஒட்டப்பட்டிருந்தது. நான் அதை உடனடியாக அகற்றச் சொல்லிவிட்டேன். மாணவர்கள் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டிருந்ததை புகைப்படம் எடுத்தது யார் எனத் தெரியவில்லை. என்னிடமும் மாணவர்களிடமும் வட்டாரக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அவரிடம் எனது விளக்கத்தை தெரிவித்துள்ளேன்,’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்
தொடக்கப் பள்ளிவிசாரணைதஞ்சாவூர்