பணிநிரந்தம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்

1 mins read
7b8104ce-0c47-4d72-9c43-f44267a10d91
பகுதிநேர ஆசிரியர்களின் நிலைமையை உணர்ந்து அரசு அவர்களுக்கு நிலையான பணி வழங்க வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் வலியுறுத்தியுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழக அரசுப் பள்ளிகளின் பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகே வியாழக்கிழமை 400க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியின்படி, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் முழக்கமிட்டனர்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க 2012 ஆம் ஆண்டு முதல் பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத் திட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். அவர்கள் வாரத்திற்கு மூன்று நாள்கள் மட்டும் பள்ளிக்கு வருவர். அதற்காக அவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.10,000 தரப்படுகிறது.

இந்நிலையில், தங்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் நேற்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கவில்லை. இதுவரை பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் அதற்கான முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசுக்கு ஒரு நினைவூட்டலே. எனவே, பகுதிநேர ஆசிரியர்களின் நிலைமையை உணர்ந்து அரசு அவர்களுக்கு நிலையான பணி வழங்க வேண்டும் என்று முருகதாஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்