வாக்களிக்கச் செல்லும் மக்கள் மனத்தில் கட்சித் தலைவர்களைக் காட்டிலும் கட்சிகளின் சின்னங்களே அதிகமாகப் பதிந்திருக்கும். இந்தத் தேர்தலில் முகங்கள் முக்கியத்துவம் பெறும் நிலை உள்ளதாகக் கூறுகிறார்கள். நான்கு முனைப் போட்டியில் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் என்ற நான்கு முகங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.
அவர்களில், பேரியக்கங்களைக் கட்டிக்காத்த தலைவர்கள் மறைந்துவிட்ட பின்னர் அந்த இயக்கங்களை இயக்கும் இரு முகங்களைப் பற்றிய சிறு தொகுப்பு இது.
2016ல் ஜெயலலிதா, 2018ல் கருணாநிதி என அடுத்தடுத்து காலமான ஆளுமைகள் விட்டுச்சென்ற அதிமுக, திமுகவில் இன்றுவரை நிலைகுலையாமல் இருப்பது திமுகதான். பிளவு இல்லை; சின்னம் தொடர்பான சிக்கல் இல்லை. இன்னும் மேலாக, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் திமுக வென்றுள்ளது. 2019, 2024 மக்களவைத் தேர்தல்கள், 2021 சட்டமன்றத் தேர்தல் என கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்தும் தலைவராக மு.க. ஸ்டாலின் பார்க்கப்படுகிறார். சொன்னதைச் செய்வார் என்று மக்கள் நம்புவது அவரது பலம்.
வாரிசு, ஊழல் என்று இந்திய அரசியல் கட்சிகளின் மீது வாரி இறைக்கப்படும் பொதுவான தூற்றல்களையும் கடந்து கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன் ஐந்தாண்டு கால அரசாங்கத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் ஸ்டாலின். மூன்றாண்டுகளாக தொழில்துறையில் அசுர வளர்ச்சி கண்டுவரும் மாநிலம் தமிழ்நாடு என்றும் பெரிய மாநிலங்களின் பொருளியல் வளர்ச்சியில் அது இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம் வெளியிட்டது. ஆளும் திறன் அப்பா கொடுத்தது என்று சுலபமாகச் சொல்லிவிட முடியாது. ஸ்டாலின் என்னும் ரஷ்யத் தலைவரின் பெயருக்காகவே ஒரு பள்ளியால் அனுமதி மறுக்கப்பட்டவர்; மிசா சட்டத்தில் கைதாகி சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர்; முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே தோல்வி கண்டவர் - என பொது வாழ்வின் உயரம் தொட நெருப்பாற்றில் நீந்தியவர் மு.க. ஸ்டாலின் என்கிறது தமிழக ஊடகம் ஒன்று.
இவரோடு ஒப்பிடுகையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைத் திறம்பட நடத்தியபோதிலும் கட்சியை ஒருங்கிணைப்பதில் பின்தங்கிவிட்டார் என்றே கூறுகிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உரியவர் தேடப்பட்டபோது பழனிசாமி கண்ணுக்குத் தெரிந்தார்; முதல்வராக அமர்த்தப்பட்டார். மக்களின் நன்மதிப்போடு அமைச்சரவையைக் கட்டுக்குள் வைத்து ஐந்தாண்டு ஆட்சியை நிறைவுசெய்தார். 2020ல் ‘இந்தியா டுடே’ நடத்திய ‘மாநிலங்களின் மனப்போக்கு’ ஆய்வில், மாநில வளர்ச்சிக்கு அடிப்படையான 12 அம்சங்களில் 11ல் பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு முதலிடம் பிடித்திருந்தது. கீழடியில் நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியதும் அவரது சாதனைப் புத்தகத்தில் அழியாமல் இடம்பெற்ற அம்சங்களில் ஒன்று.
ஆனாலும், தம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த, தம்மை முதல்வர் பதவியில் அமர்த்திய தலைவர்களுடன் ஒத்துப்போவதில் பழனிசாமி மாறுபட்ட போக்கைக் கடைப்பிடித்ததால், ஓபிஎஸ், டிடிவி தினகரன், விகே சசிகலா, கே.ஏ. செங்கோட்டையன் போன்ற முன்னணித் தலைவர்கள் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டனர். தனித்தனி அணியாக உடைந்ததால், ஜெயலலிதாவின் அதிமுகவுக்கு இருந்த வலிமையை பழனிசாமியின் அதிமுகவிடம் பார்க்க முடியவில்லை. அதன் விளைவு, தொடர்ச்சியாக எல்லாத் தேர்தல்களிலும் தோல்வி. இழப்பைச் சரிக்கட்ட முன்வந்த பாஜகவையும் சரிவரப் பயன்படுத்தாமல் போனதும் துரதிருஷ்டம்தான். 2021ல் உறவு, 2024ல் பிரிவு, 2026ல் மீண்டும் உறவு - இதுதான் பாஜகவுடனான அதிமுகவின் பாசம்.
ஆக, கட்டுக்கோப்பாக இருந்து, கச்சிதமாகக் கூட்டணி அமைக்கும் கட்சியின் கொடியே வெற்றிக்கொடியாகப் பறக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள். -திருநா

