கோவை: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலிருந்து தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் சென்ற விமானப் பயணி ஒருவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மதிப்பு கிட்டத்தட்ட 1.01 கோடி ரூபாய் (S$158,800) என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் ஊடகம் வழியாகப் பதிவிட்டுள்ள சுங்கத்துறை, “தாய்லாந்திலிருந்து கஞ்சா கடத்தி வருவதாக உளவுத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) பேங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக TR-540 ஸ்கூட் விமானம் மூலம் கோவை வந்திறங்கிய ஆடவர் ஒருவரைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்,
“அவருடைய பயணப்பபையிலிருந்து 2,002 கிராம் எடைகொண்ட, கஞ்சா எனச் சந்தேகிக்கப்படும் பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். சோளச் சீவல் (Corn flakes) பொட்டலங்களுக்குள் அது மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்திய நாட்டவரான அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்,” என்று தெரிவித்துள்ளது.
இதன் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
இதனிடையே, திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் 2.291 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்ததாகக் கூறி செவ்வாய்க்கிழமையன்று கைதுசெய்யப்பட்டார். அதன் மதிப்பு ரூ.1.53 கோடி இருக்கும் எனக் கூறப்பட்டது.

