சென்னை: ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானம் தரையிறங்கிய தருணத்தில், திடீரென அதன் அவசரகால கதவைத் திறந்த பயணியால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுதொடர்பாகப் புதுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயது ஆடவரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏறக்குறைய 231 பயணிகளுடன் வந்த அந்த விமானம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியது.
விமானம் மெதுவாகத் தரைப்பகுதியில் நகர்ந்துகொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராதவிதமாக அந்த ஆடவர் அவசரகாலக் கதவுகளில் ஒன்றை வலுக்கட்டாயமாகத் திறந்துள்ளார்.
இதனைக் கண்ட சக பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிடவே, விமானி உடனடியாக விமானத்தை நிறுத்திவிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு அவசரத் தகவல் அளித்தார்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்களும் வெடிகுண்டு நிபுணர்களும் விமானம் நின்ற பகுதிக்கு உடனடியாக விரைந்து வந்து சம்பந்தப்பட்ட பயணியைக் கைது செய்தனர்.
தொடர்ந்து, அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விமானப் பாதுகாப்பு விதிகளைக் கடுமையாக மீறிய அந்தப் பயணியின் மனநிலை குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் நிலவிய பரபரப்பு, பின்னர் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் சீரானது.

