தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் நிலையங்களுக்குக் குழுவாக வரும் திருடர்கள் குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை

2 mins read
33029dbe-02aa-4690-916c-3c8fca0a8d67
ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: அண்மைக் காலமாக பல திருடர்கள் குழுவாக வந்து ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளைத் திசைதிருப்பி, பொருள்களைத் திருடிச் செல்வதாக ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) எச்சரித்துள்ளது. எனவே, தனது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அது தெரிவித்தது.

தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட ஆறு கோட்டங்களில் 725 ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உட்பட தென்னிந்தியாவின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து ஏராளமானோர் நாட்டின் பிற பகுதிகளுக்கு நாள்தோறும் பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதனால் பயணியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், பயணிகள் போல் நடிக்கும் சிலர் கைப்பேசி, நகை, பணம் ஆகியவற்றைத் திருடுவதுடன் கஞ்சா, ரேஷன் அரிசிக் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

ரயில் நிலையங்களில் நெரிசல் மிகுந்த நேரங்களில் இதுபோன்ற செயல்கள் அதிகமாக நடக்கின்றன. பொருள்களைப் பறிகொடுத்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

“கடந்த சில நாள்களாகப் பொருள்கள் திருடுபோவது திடீரென அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தியதுடன், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டோம். அதில், நெரிசல் மிக்க இடங்களுக்கு குழுவினராக வரும் சிலர், பொதுமக்களிடம் இருந்து பொருள்களைத் திருடிச் செல்வது தெரிய வந்தது,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் கைவரிசை காட்டாமல் பேருந்து நிலையம், கடற்கரை, கோவில்கள், வணிக வளாகங்கள் என ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்களை அரங்கேற்றுவதும் தெரியவந்துள்ளது.

இதுவரை பத்துக்கும் மேற்பட்ட திருடர்கள் சிக்கியுள்ள நிலையில், மற்றவர்களுக்கும் வலைவீசப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்