சென்னை: கடந்த இரு நாள்களாக பல்வேறு தமிழக நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமானங்களுக்கான பயணக்கட்டணம் பலமடங்கு அதிகரித்தது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
குறிப்பாக, தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊர் திரும்பிய பலர், சென்னைக்கு எப்படித் திரும்புவது என்று திட்டமிட முடியாமல் தவிப்புக்குள்ளானதாக ஊடகச் செய்தி தெரிவித்தது.
வாக்களித்த ஏராளமானோர், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) முதல் சென்னைக்கு திரும்பி வந்தவண்ணம் உள்ளனர். இதனால் ரயில், பேருந்து, விமானங்களுக்கான பயணச்சீட்டைப் பதிவுசெய்ய பலத்த போட்டி நிலவியது.
ரயில், பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் விமானங்களில் செல்லத் திட்டமிட்டதால் விமானக் கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்தன.
குறிப்பாக, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானச் சேவைகளின் கட்டணம் வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிகரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில விமானங்களில் மட்டுமே இடம் இருந்ததாகவும் கடைசி நேரத்தில் அவற்றின் கட்டணங்கள் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக, தூத்துக்குடி-சென்னை இடையே ஏறக்குறைய 5,000 ரூபாயாக இருக்கும் கட்டணம், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை வரை ரூ.17,000க்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதேபோல் மதுரை-சென்னை இடையேயான விமானக்கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து ரூ. 32,000ஆக அதிகரித்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், திருச்சி-சென்னை இடையே ரூ.4,500க்கு விற்கப்பட்ட பயணச்சீட்டு, ரூ.14,310ஆகவும் கோவை-சென்னை இடையே ரூ.4,000ஆக இருந்த கட்டணம் ரூ.11,000ஆகவும் விலை அதிகரித்து இருந்ததாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

