நோயாளியை இனி மருத்துவப் பயனாளி என்று அழைக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்

நோயாளியை இனி மருத்துவப் பயனாளி என்று அழைக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்

2 mins read
93c7e812-fd5d-4bb1-bf29-6c62a5109963
மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிய பின்னர் முதல் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை:  நோயாளிகளை இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘நலம் காக்​கும் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலை தொடங்கிவைத்துப் பேசியபோது நோயாளிகளுக்கு அவர் அந்த புதிய பெயரைச் சூட்டினார்.

“சில நாள்களுக்கு முன்னர் எனக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே சில பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டேன்.

“அங்கு இருந்தபோதும்கூட முக்கியமான அரசு அலுவல்களை மேற்கொண்டேன்.

“மருத்துவமனையிலிருந்து திரும்பிய பின்னர் நான் கலந்து கொண்டு பேசும் முதல் நிகழ்ச்சி இதுதான்.

“நான் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் தமிழக அரசு மிகுந்த நெருக்கடியில் இருந்தது.

“நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களாக மாறி செயல்பட்டோம். அதேபோல், இன்று இந்தத் திட்டத்தை தொடங்குவதன் மூலம் மீண்டும் அமைச்சர்கள் அனைவரும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களாக மாறி, அந்தந்த மாவட்டங்களில் முகாம்களை தொடங்குகின்றனர்.

“மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளி என்றழைக்காமல் மருத்துவப் பயனாளி என்றழைக்க வேண்டும்.

“மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களை குடும்பத்தாரை கவனித்துக் கொள்வது போல் அக்கறையுடன், பரிவுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

“தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மையானதாக திகழவேண்டும் என்பதே எனது கனவு. அவ்வாறாக மருத்துவச் சேவை வழங்குவதிலும் மக்களின் உடல்நிலையைப் பாதுகாப்பதிலும் தமிழ்நாடுதான் முதன்மையானதாகத் திகழும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று மு.க. ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்