தமிழகம் முழுவதும் சுற்றுக்காவல் பணிகள் தீவிரம்

தமிழகம் முழுவதும் சுற்றுக்காவல் பணிகள் தீவிரம்

2 mins read
8c314872-e51d-4042-a24e-4988df61a950
கோவில்பட்டியில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர். - படம்: டியூட்டி ஆன்லைன்

சென்னை: தமிழகம் முழுவதும் நடைச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழகக் காவல்துறைத் தலைவர் (டிஜிபி) மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளைக் கண்டறிய முடியும் என அறிவுறுத்தியுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

காவல் நிலைய அதிகாரி முதல் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வரை, அனைத்து அதிகாரிகளும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்களுடன் இணைந்து நடைச் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களது குறைகள், பிரச்சினைகளை அறிதல், நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தல், சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல், சமூகவிரோதிகள், குற்றவாளிககளைக் கண்காணித்து எச்சரித்தல், காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்துதல் ஆகியவையே தமது உத்தரவின் முக்கியமான நோக்கம் என டிஜிபி மகேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி, 34 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், 28 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 146 துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், 499 காவல்துறை ஆய்வாளர்கள் இந்த நடைச் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, 4, 5ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் தீவிர நடைச் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டதாகவும் இதன் மூலம், மூத்த அதிகாரிகள், குற்றம் நடைபெறும் பகுதிகளில் நேரடியாகக் கள ஆய்வுசெய்து, பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களிடமிருந்து கருத்துகள், பின்னூட்டங்களைப் பெற்று, அவர்களின் குறைகள், தேவைகளை அறிந்து, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் டிஜிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்