தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழடியில் தந்தத்தாலான ஆட்டக்காய் கண்டெடுப்பு

1 mins read
8c5c27db-310a-47be-9f7e-6575debd2539
மண்ணுக்கு அடியில், 1.2 மீட்டர் ஆழத்தில் யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட இந்த ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்

சிவகங்கை: கீழடியில் நடந்து வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் யானைத் தந்தத்தாலான ஆட்டக்காய் கிடைத்துள்ளது.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அமைந்துள்ள கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அங்கு இதுவரை இரு குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், அவற்றிலிருந்து கண்ணாடி மணிகள், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பதிக்கப்பட்ட பானை ஓடுகள், சுடுமண் பானை உள்ளிட்ட தொல்லியல் சின்னங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், சனிக்கிழமை (ஜூலை 13) நடந்த அகழாய்வின்போது, 1.2 மீட்டர் ஆழத்தில் யானைத் தந்தத்தாலான ஆட்டக்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உருளை வடிவ உடற்பகுதியை உடைய அந்த ஆட்டக்காய், சற்று அரைக்கோள வடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது. இந்த ஆட்டக்காய் 1.3 சென்டிமீட்டர் உயரமும், 1.5 சென்டிமீட்டர் விட்டத்துடன் கூடிய தலைப்பகுதியையும், 1.3 சென்டிமீட்டர் விட்டத்துடன் கூடிய அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.

கருமை நிறத்துடனும் பளபளப்பான மேற்பரப்புடனும் இந்த ஆட்டக்காய் காணப்படுகிறது. தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதைக் கீழடியில் மேம்பட்ட தமிழ்ச் சமூகம் வாழ்ந்ததற்கான சான்றாகக் கருதலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்