தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்பதை தமிழக மக்கள் ஏற்கெனவே உணர்த்தியுள்ளனர்: திருமாவளவன்

2 mins read
7f52e688-818f-42d1-a2bc-76311de9ef0d
திருமாவளவன். - படம்: ஊடகம்

திருச்சி: திமுக கூட்டணி உறுதியாக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

எனவே, வரும் தேர்தலில் கூட்டணி 200 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள கருத்து சரியானதுதான் என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விசிக, 25 தொகுதிகளைக் கேட்கும் என அக்கட்சி மூத்த நிர்வாகிகளில் ஒருவரான வன்னியரசு அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், வன்னியரசு தனது சொந்த கருத்தைக் கூறியுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

“திமுக கூட்டணி தமிழகத்தில் பல இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பாஜக தலைமையில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்பதை தமிழக மக்கள் ஏற்கெனவே உணர்த்தியுள்ளனர்.

“திமுக கூட்டணி சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. அதனால் அவர்கள் இக்கூட்டணிக்கு வாக்களிக்கிறார்கள். கடந்த பொதுத் தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற சிறுபான்மை மக்களின் வாக்குகள்தான் பெருமளவில் உதவியது.

“அம்பேத்காரைப் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதை ஏற்க இயலாது. அவரைக் கண்டித்து டிசம்பர் 28ஆம் தேதி நாடு தழுவிய அளவில் அம்பேத்கர் இயக்கத்தினர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகிறோம். சென்னையில் விசிக சார்பில் போராட்டம் நடைபெறும். அதில் அம்பேத்கர் பெயர் ஆயிரம் முறை உச்சரிக்கப்படும்.

“ஆளுங்கட்சி மீது குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு மனக்குறைகள் இருக்கத்தான் செய்யும். திமுக மீது குறைகூற விசிகவிடம் ஒன்றுமில்லை. தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை அரசு விரைந்து கட்டுப்படுத்த வேண்டும்,” என்றார் திருமாவளவன்.

குறிப்புச் சொற்கள்