சென்னை: பல்வேறு இடையூறுகளைக் கடந்து தமிழகத் தேர்தலில் தவெக வெற்றிக்கொடி நாட்டியுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தவெக சார்பாக, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 16,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்ப அரசியலைத் தமிழக மக்கள் தூக்கி வீசிவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், சாதி, சமய, பண அரசியலையும் தமிழக மக்கள் அறவே புறக்கணித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
தவெகவால் பத்து எம்எல்ஏக்களைக்கூட பெறமுடியாது என்று பலரும் எள்ளி நகையாடியதாகக் குறிப்பிட்ட அவர், தவெகவுக்கு எந்த இடத்திலும் பிரசாரம் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு வகையிலும் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகச் சாடினார்.
“ஆனால், இன்று தவெக ஆட்சி அமைக்கும் வகையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் நடந்த குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.
“இது வரலாற்று வெற்றி. தலைவர் விஜய்க்கான வெற்றி.
“பணத்துக்காக வாக்கு என்ற தமிழகத்தின் மீதான கறையைத் தவெக நீக்கிவிட்டது. ஒரு ரூபாய்கூட பணம் விநியோகிக்காமல் வெற்றி பெற்றுள்ளோம்,” என்றார் ஆதவ் அர்ஜுனா.

