சென்னை: மத்திய அரசு இனியும் திருந்தவில்லை என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்களின் செயல்பாடுகளைப் பாராட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி, வெள்ளிக்கிழமை முடிவுற்றது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழங்கியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் நலனுக்காகக் குரல் கொடுப்பது, மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள்.
“நாட்டை உலுக்கும் மணிப்பூர் வன்முறை, அதானி விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
“அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை என தான் பொறுப்பேற்று பதில் சொல்லியே ஆகவேண்டிய அனைத்திலும் அமைதி காக்கும் பிரதமர், நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வினரால் ஜனநாயகம் படாதபாடு பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
“அரசியல் சட்டத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது அந்தச் சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து, இழிவுபடுத்திப் பேசியது பாஜகவின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது.
“ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா, இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு. இதுதான் பாஜவின் பசப்பு அரசியல் ஆகும். இதற்கெல்லாம் மக்கள் பாஜக அரசுக்குப் பதிலடி கொடுப்பார்கள்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

