சென்னை: தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள இருக்கும் மக்கள் சந்திப்புக்கான சுற்றுப்பயணத்துக்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, இரண்டு முறை விஜய்யின் சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்க அனுமதி கோரி, காவல்துறையிடம் அளிக்கப்பட்ட மனு ஏற்கப்படவில்லை.
மூன்றாவது மனு ஏற்கப்பட்டதை அடுத்து, விஜய்யின் சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுளள்ன. அதன்படி, வரும் 13ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். திருச்சியில் இருந்து அவர் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கி, டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திக்க உள்ளார் விஜய்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே அவர் மக்களைச் சந்திப்பதுபோல் அவரது பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விதிவிலக்காக, அக்டோபர் 5ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு சனிக்கிழமையும் மூன்று மாவட்டங்களுக்கும் சென்று அவர் மக்களைச் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தவெக மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக விஜய் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது,” என்று தமது எக்ஸ் தளப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.