தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

1 mins read
975d03c9-a607-4e73-9574-0bc140652c42
சிவகாசியில் உள்ள ஆலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தீபாவளிப் பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காலை 6 முதல் 7 மணி வரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க முடியும்.

பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட குறைந்த ஒலி, குறைந்த காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்கவேண்டுமென மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

அத்துடன், அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அந்த வாரியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

மேலும் அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்