தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடுமலை காவல்துறை அதிகாரி கொலையில் சம்பந்தப்பட்ட நபர் சுட்டுக்கொலை

2 mins read
a5f1c9e6-12b3-4cfe-93c2-beecbce51769
படுகொலை செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முகவேல், என்கவுன்டரில் கொல்லப்பட்ட மணிகண்டன் (வலது). - படங்கள்: ஊடகம்

உடுமலை: திருப்பூரில் தந்தை - மகன் பிரச்சினையை விசாரிக்கச் சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த அச்சம்பவத்தில் தொடர்புடைய நபரைக் காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 57 வயதான சண்முகவேல் என்பவர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.

அப்பகுதியில் இருக்கும் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்த 66 வயது மூர்த்தி என்பவருக்கும் அவரது மகன்களுக்கும் அடிதடி ஏற்பட்டது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரி சண்முகவேல் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தில் தொடர்புடைய மூர்த்தி, அவரது மகன்கள் மணிகண்டன், தங்கப்பாண்டி ஆகியோர் தலைமறைவாகினர்.

அந்த மூவரையும் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், மூர்த்தியும் தங்கப்பாண்டியனும் திருப்பூர் காவலர்களிடம் சரணடைந்தனர். ஆக்ஸ்ட் 6ஆம் தேதி இரவு தனிப்படை காவலர்கள் மணிகண்டனைக் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தை காண்பிப்பதற்காக மணிகண்டனைக் காவல்துறையினர் சிக்கனூத்து அருகே உள்ள உப்பாறு ஓடைக்கு வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 7) அழைத்துச் சென்றனர்.

அப்போது மறைவான இடத்திலிருந்த அரிவாளைக் கொண்டு காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை மணிகண்டன் தாக்கியதாகவும் அதனால் அவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனால், தற்காப்புக்காகக் காவல் ஆய்வாளர் திருஞானசம்பந்தம் தமது துப்பாக்கியைப் பயன்படுத்தி மணிகண்டனைச் சுட்டார் என்றும் பின் தலையில் குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்றும் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இதற்கிடையே, காவல்துறை அதிகாரி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்