தமிழகத்தைச் சேர்ந்தவர் சீனாவுக்கான இந்தியத் தூதராக நியமனம்

தமிழகத்தைச் சேர்ந்தவர் சீனாவுக்கான இந்தியத் தூதராக நியமனம்

1 mins read
be015931-d27f-40d3-89dd-5f8bb9272c3f
 சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி. - படம்: ஐஏஎன்எஸ்

புதுடெல்லி: சீனாவுக்கான இந்தியத் தூதராக இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும் பிரிட்டானுக்கான இந்தியத் தூதருமான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான விக்ரம், ராணுவக் குடும்பத்தில் பிறந்தவர். அவரின் தந்தை பங்ளாதேஷ் விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார்.

தற்போது, சீனாவில் இந்தியத் தூதராகப் பணியாற்றி வரும் பிரதீப் குமார் ராவத்துக்குப் பதிலாக விக்ரம் அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

சீனாவின் வரவேற்பும் ‘வெய் ஜியாமெங்’ பெயரும்

விக்ரம் துரைசாமியின் நியமனத்தை சீனா வரவேற்றுள்ளது.

அது குறித்துப் பேசிய சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான், “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த தூதர்கள் ஒரு பாலமாக விளங்குவர். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சீனா வழங்கும்,” என்று தெரிவித்தார்.

மேலும், விக்ரம் துரைசாமி தனக்கென ‘வெய் ஜியாமெங்’ என்ற சீனப் பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாண்டரின் மொழியில் அந்தப் பெயருக்கு ‘சிறந்த கூட்டணியை உருவாக்குபவர்’ அல்லது “புகழ்பெற்ற பங்காளி” என்று பொருள்.

சீனாவில் தூதர் ஒருவருக்கு அந்நாட்டின் மொழியில் பெயர் சூட்டுவது, சுமுகமான அரசதந்திர உறவிற்கான நல்ல அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, இந்தியா - சீனா இடையிலான உறவு மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில், சீன விவகார நிபுணர் ஒருவர் அந்நாட்டுக்குத் தூதராக நியமிக்கப்பட்டிருப்பது அனைத்துலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்