தஞ்சை: காவிரியில் நீர்வரத்து இல்லாதது, வடகிழக்குப் பருவமழை கைகொடுக்காதது உள்ளிட்ட காரணங்களால், தஞ்சாவூர் மாவட்டத்தின் டெல்டா பகுதிகளில் சம்பா பயிர்கள் காய்ந்து கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் பிடித்துவந்து ஊற்றும் அவலநிலை நீடித்து வருகிறது.
மேட்டூர் அணையில் இந்த ஆண்டு நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்ததால், வழக்கம்போல ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடியைக் கைவிட்ட விவசாயிகள், செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்ட மேட்டூர் நீரையும் தொடக்கக்கால மழையையும் நம்பி சம்பா சாகுபடியைத் தொடங்கினர்.
எனினும், டெல்டா மாவட்டங்களில் 3.12 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை 1.90 லட்சம் ஏக்கரில் மட்டுமே நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதால், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் போன்ற முக்கிய ஆறுகளில் நீரோட்டம் முற்றிலும் நின்றுவிட்டது. இதன் காரணமாக, ஆற்றங்கரையோர விவசாயிகள் டீசல் மோட்டார்கள் மூலம் நீரை இறைத்துவரும் நிலையில், தொலைதூரப் பகுதி விவசாயிகளுக்கு அந்த வசதியும் இல்லை.
குறிப்பாக, தஞ்சாவூர் அருகே உள்ள நல்லவன்னியன் குடிகாடு, சங்கரதேவன் குடிகாடு, மலையர் நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா பயிர்கள் காய்ந்து, வயல்களில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பயிர்களைக் காப்பாற்ற வேறுவழியின்றி அப்பகுதி விவசாயிகள் குளம், குட்டைகளில் எஞ்சியுள்ள தண்ணீரைத் தலையிலும் கைகளிலும் குடங்களாகச் சுமந்து வந்து ஊற்றி வருகின்றனர்.
ஏற்கெனவே ஒரு மாதத்திற்கு முன்பு நடவு செய்துள்ள இப்பயிர்களுக்காக ஏக்கருக்கு ஏறக்குறைய 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாகத் தமிழக அரசும், வேளாண் மற்றும் வருவாய்த் துறையினரும் இப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
