தமிழகத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

1 mins read
812a4098-00da-4d95-b149-e71cc3c293d3
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. - படம்: புதிய தலைமுறை

புதுடெல்லி: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாக இருப்பதால் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் தமது மனுவில் கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக்கூறி சென்னை எம்ஜிஆர். நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் அண்மையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும் தமிழகத்தில் கடந்த 75 நாட்களில் 234 கொலைகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.

“தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது, பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும்,” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்