பழனிசாமி: பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை

2 mins read
f1303470-3259-46a1-9fcf-3842a0b3590f
2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான அதிமுகவின் மெகா கூட்டணியில் பாஜக இருக்காது என்கிறார் பழனிசாமி. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

கிருஷ்ணகிரி: பாஜகவுடன் கூட்டணி இல்லை, மீண்டும் மீண்டும் இதையே கேட்காதீங்க என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

“நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்குத்தான். பாஜகவுக்கு அல்ல,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் திரு பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

“வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை பல இடங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். மீண்டும் மீண்டும் இதே கேள்வியை கேட்க வேண்டாம். எங்களுக்கு மக்கள் விரோத தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை. நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்றக் கட்சிகளுக்குதான். ஏற்கெனவே லோக்சபா தேர்தலில் தெளிவுபடுத்தி விட்டோம். வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். இதனை தவிர்த்துதான் பேசி கொண்டு இருக்கிறோம்,” என்று பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“தேர்தல் முடிந்த பிறகுதான், யார் யாருக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது தெரியவரும். இது மறைமுகமான வாக்குகள்தான். நேரடி வாக்கு கிடையாது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உடைய ஒரே கட்சி அ.தி.மு.க. இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு அ.தி.மு.க., ஆட்சியே காரணம். அ.தி.மு.க., ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., அரசை மக்கள் எப்படி புறக்கணிப்பார்கள். யார் சேவை செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும்.

“அ.தி.மு.க., மக்கள் செல்வாக்கு நிறைந்த கட்சி என்பதை பலமுறை நிரூபித்து காட்டியுள்ளோம். ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., மெகா கூட்டணி அமைக்கும். அ.தி.மு.க., மெகா கூட்டணியில் பா.ஜ., இருக்காது. மக்களை குழப்பி ஆதாயம் தேட முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார். மக்களுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திட்டங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,” திரு பழனிசாமி மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்