அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

2 mins read
30cde0d4-2e7b-490b-9148-23a4c3fe6699
பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. - படம்: ஆசிரியான்நெட் நியூஸ்

சென்னை: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்திருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), பாரதிய ஜனதா (பாஜக) ஆகிய கட்சிகளுக்கு இடையே எத்தனை தொகுதிகள் என்று இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், பாமகவுக்கும், அமமுகவுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணியில் தமாகா, அமமுக., பாமக., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் பிடி கொடுக்காமல் உள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, ‘’தேமுதிக யாருடன் கூட்டணி? என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம். இப்போது அது குறித்து சொல்ல அவசியமில்லை. எங்களுடன் பாஜக பேச்சுவார்தை நடத்தவில்லை. கூட்டணி தொடர்பாக தொலைபேசியிலும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும் நிலையில், பிரேமலதா கூட்டணி குறித்து மௌனம் காப்பது பாஜகவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

திமுகவுடன் கூட்டணி வைக்க பிரேமலதாவும், கட்சியின் நிர்வாகிகளும் விரும்புவதாகவும், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விஜய் பிரபாகரன் விரும்புவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் தான் கூட்டணி குறித்து தெளிவான முடிவை எடுக்க முடியாமல் பிரேமலதா தள்ளிப்போட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையை அடுத்த மதுராந்தகத்தில், வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்தப் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் ஏற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில், மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் முன்கூட்டியே வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெறும் இந்த விருந்து நிகழ்வில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதே போன்று அதிமுக மூத்த நிர்வாகிகளான வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

விருந்து நிகழ்வைத் தொடர்ந்து பழனிசாமி, பியூஸ் கோயல் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக), அதிமுக கூட்டணியில் அதிகாரப் பகிர்வையும், கூடுதல் இடங்களையும் வலியுறுத்தியுள்ளது. அதே சமயம் 3 முக்கியமான அமைச்சர் பதவிகளை இப்போதே கேட்டு வருகிறதாம். அதாவது மொத்தமாக 6 அமைச்சர் பதவி வேண்டும். அதில் 3 துறைகள் நாங்கள் கேட்பதாக இருக்க வேண்டும் என்று பாஜக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகப் பேசப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்