சென்னை: சென்னை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) நடத்தும் போராட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது.
அதனையடுத்து சென்னை காவல்துறை ஆணையருக்கு எதிராக விதிமீறல் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் சட்சி (பா.ம.க) சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தினமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தின் தொடர்பில் பா.ம.க நீதிமன்றத்திடம் முறையிட்டது என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறையைக் கண்டித்து இம்மாதம் இரண்டாம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் பா.ம.க சார்பில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது என்றும் அதற்கு அனுமதி கோரி காவல்துறை ஆணையரிடம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது என்றும் அந்நகர உயர்நீதிமன்றத்தில் பா.ம.க தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து நாள்களுக்கு முன்னரே விண்ணப்பம் செய்யவேண்டும் என்ற காரணத்தால் காவல்துறை அனுமதி தர மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்து பா.ம.க மனு தாக்கல் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவாகியுள்ளது.

