சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகிறது பாட்டாளி மக்கள் கட்சி.
புதன்கிழமை (ஜனவரி 7) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
அப்போது இருவரும் கூட்டணி அமைப்பது குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பதாக அன்புமணி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
“பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்,” என்றார் அன்புமணி.
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே பாமகவின் நோக்கம் என்றும் சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் தாம் நூறு நாள் நடைப்பயணம் மேற்கொண்டபோது கிராம மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருப்பதைக் கண்டதாகவும் தேர்தல் எப்போது வரும் என்று அம்மக்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் அன்புமணி குறிப்பிட்டார்.
“இது பெண்களுக்கு எதிரான ஆட்சி. திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. சமூக நீதி குறித்து அக்கறையற்ற திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்,” என்றும் அன்புமணி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
எடப்பாடி பழனிசாமி கூறுகையில், வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்குத் தேவையான திட்டத்தை அளிக்கும் வகையில் அதிமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.
“அதிமுக, பாஜக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து இரவு, பகல் பார்க்காமல் தேனீக்கள், எறும்புகள்போல் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றி பெறும்.
“பாமகவுக்கான தொகுதிகளை ஏற்கெனவே முடிவு செய்துவிட்டோம். அது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளன,” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதனிடையே, அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பது திமுக அணிக்குப் பின்னடைவு ஏற்படுத்தக்கூடும் என அரசியல் கவனிப்பாளர்களில் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
அதேசமயம் ராமதாஸ் தலைமையிலான பாமகவினர், திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் திமுக கூட்டணி மீண்டும் வலுப்பெறும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

