சென்னை: பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுபவர்களும் அவற்றை முறையுடன் கையாளத் தவறுபவர்களும் கடுமையான சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். தேவையேற்பட்டால் இதுபோன்றவர்களைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் தமிழக அரசு, மருத்துவக் கழிவுகள் குறித்த வழக்கு விசாரணை ஒன்றில், மருத்துவக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தது.
உயர் நீதிமன்றமும் இத்தகைய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு இது சரியான நேரம் என்று கருத்துத் தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரையிலும் அந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இது குறித்து வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவக் கழிவுகள் முறையாகக் கையாளப்படாத செயல் தமிழ் நாட்டின் சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதல் இடத்தில் உள்ளது. எனவே, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். அதற்கேற்ப உடனடியாகச் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி அருகில் உள்ள பர்கூர் சிப்காட்டில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், மருத்துவக் கழிவு மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதை உடனடியாக மூட வேண்டும். அந்த நிறுவனம் மருத்துவக் கழிவுகளை நிலத்தில் புதைத்தும் பாதுகாப்பற்ற முறையில் எரித்தும் வருகிறது. அதனால் அந்த வட்டாரத்தில் நிலத்தடி நீர் கடுமையாக மாசு அடைந்துள்ளது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கழிவுகள் தான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் கேரளாவிலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
சென்னை உயர் நீதிமன்றமும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் மருத்துவக் கழிவுகளைப் பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யும்படியும் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளன என்று திரு ராமதாஸ் கூறியுள்ளார்.
மருத்துவக் கழிவுகள் முறையாகக் கையாளப் படவில்லையெனில், மிகப் பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளும், அது சார்ந்த சிக்கல்களும் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

