கவிஞர் நந்தலாலா காலமானார்

2 mins read
84fd47b2-5c20-4b0c-85c7-baa74e628401
கவிஞர் நந்தலாலா. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினரும் பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை (4.3.2025) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தலாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நந்தலாலா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராக இருந்தார். அவரது மறைவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கவிஞர் நந்தலாலா மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கையின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள். முற்போக்கு மேடைகள். தொலைக்காட்சி விவாதங்கள். பட்டிமன்றங்கள் எனக் கவிஞர் நந்தலாலா அவர்களின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை எனும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும், அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்றவர் கவிஞர் நந்தலாலா. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவர், கள்ளழகர் படத்தில் ஓ மாணாளே, சின்ன வயசுல, ஜெயம், உள்ளிட்ட படத்தில் பாடல்கள் எழுதி உள்ளார். இவரது மறைவுக்கு தலைவர்களும் தமிழ் ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் நந்தலாலா எழுதிய ‘திருச்சி - ஊறும் வரலாறு’ என்ற தொடர், விகடன் இணைய இதழில் வெளியாகி, பின்னர் நூலாக வெளியானது. இந்த நூலில், இமயமலையை விட வயதான திருச்சி மலைக்கோட்டை பற்றிய தகவல்கள், திருச்சியில் வேளாண்மை, சதங்கையின் ஜதிகளும் `சரிகமபதநி’யும் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்