சேலத்தில் மக்கள் சந்திப்பு: விஜய் பிரசாரத்திற்கு அனுமதி

சேலத்தில் மக்கள் சந்திப்பு: விஜய் பிரசாரத்திற்கு அனுமதி

2 mins read
9bae51eb-fbf8-4fe8-bb6a-7d0d7945a552
விஜய். - படம்: டெக்கான் குரோனிக்கல்

சேலம்: தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டங்களுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் விஜய். வரும் 13ஆம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.

இதற்கு உரிய அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்திருந்தனர்.

அப்போது, தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பத்து வகை ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து, தவெக நிர்வாகிகள் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தனர்.

அதைப் பரிசீலித்த காவல்துறை சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து - நடராசர் திடலில் 13ஆம் தேதி கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது.

அன்றைய நாள் நண்பகல் 12 மணி முதல் 3 மணிவரை நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விசிலுக்குத் தடை

இதனிடையே, சென்னையில் சேப்பாக்கம் விளையாட்டு அரங்கிற்குள் விசில் எடுத்துச் செல்ல ரசிகர்களுக்கு காவல்துறை தடை விதித்தது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான லீக் ஆட்டம் நடைபெற்றது. இதைக் காண ஏராளமான ரசிகர்கள்‌ குவிந்தனர்.

இந்நிலையில், விளையாட்டு அரங்குக்குள் விசில் கொண்டுசெல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவேதான் விசில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக சேப்பாக்கம் அரங்குக்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் புட்டிகள், ஆளில்லா வானூர்தி, மடிக்கணினி ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

இந்நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராவிட்டாலும் காவல்துறையும் விளையாட்டரங்க நிர்வாகமும் விசில் கொண்டுசெல்ல தடை விதித்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்