காஞ்சிபுரம்: சட்டவிரோதமாக மது விற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்த காஞ்சிபுரம் காவல் ஆய்வாளருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா மேரி. 40 வயதான இவர், ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.
ஸ்டெல்லாவின் கணவர் சுரேஷ் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். எனினும், அவரால் போதுமான வருமானம் ஈட்ட முடியவில்லை. எனவே, செலவுகளைச் சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்று வந்துள்ளார் ஸ்டெல்லா.
இது தொடர்பாக அவர் மீது ஆறு வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், அவரை நேரில் சந்தித்துப் பேசிய மணிமங்கலம் பகுதி காவல் ஆய்வாளர் அசோகன், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தினார்.
அதை ஏற்று, கடந்த மூன்று மாதங்களாக ஸ்டெல்லா மேரி திருந்தி வாழ்ந்துள்ளார். மேலும், தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாற்று வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, ஸ்டெல்லாவின் கணவருக்கு புதிய ஆட்டோ ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் ஆய்வாளர் அசோகன்.
மாற்றுத்திறனாளி பெண் மீது வழக்குப் பதியாமல், அவரது நிலையைக் கண்டு உதவிய அவரைப் பலரும் பாராட்டி உள்ளனர்.

