பணி ஓய்வு நாளில் மெதுவோட்டத்திலேயே வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரி

பணி ஓய்வு நாளில் மெதுவோட்டத்திலேயே வீட்டுக்கு வந்த காவல்துறை அதிகாரி

1 mins read
dbc33c20-d2f9-40ec-9eab-fe75c56ae630
இளையர்கள் மத்தியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புவதாகக் கூறினார் பாலகிருஷ்ணன். - படம்: ஊடகம்

குமரி: காவல் அதிகாரி ஒருவர், பணி ஓய்வு பெற்ற நாளில் காவல் நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 17 கிலோ மீட்டர் தூரத்தை ஓடிக் கடந்து தன் வீட்டைச் சென்றடைந்தார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். 41 ஆண்டுகள் பணியாற்றிய அவர் அண்மையில் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, அவருக்கு மற்ற அதிகாரிகளும் காவல்துறை ஊழியர்களும் பாராட்டு விழா நடத்தினர். விழா முடிந்த பின்னர், பணி ஓய்வு பெற்றவரை பெருமைப்படுத்தும் விதமாக, அதிகாரிகள் ஒரு காரில் வீடு வரை அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது.

ஆனால், தினமும் நடைப்பயிற்சி செய்வதிலும் மெதுவோட்டத்திலும் ஆர்வம் கொண்ட பாலகிருஷ்ணன், தமக்கு இத்தகைய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டாம் எனக் கூறிவிட்டார்.

பாராட்டு விழா முடிந்த கையோடு, வழக்கம்போல் அங்கிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு அவரை அழைத்துச் செல்ல அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் பாலகிருஷ்ணனோ, வழக்கம்போல் தன் வீட்டிற்கு நடந்து செல்வதாகக் கூறினார்.

இளையர்கள் மத்தியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மெதுவோட்டம் செய்தும் நடந்தும் தன் வீட்டைச் சென்றடைய விரும்புவதாக அவர் கூறியதைக் கேட்டு அதிகாரிகள் வியந்தனர். எனினும், யாரும் அவரைத் தடுக்க முற்படவில்லை.

தாம் விரும்பியபடியே, 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு மெதுவோட்டத்திலேயே சென்றார் பாலகிருஷ்ணன்.

குறிப்புச் சொற்கள்