சென்னை: மதுரையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழக காவல்துறை இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இம்மாதம் (ஆகஸ்ட்) 25ஆம் தேதி இம்மாநாட்டை நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். வரலாற்றில் முக்கியமான நாளாக இடம்பெறும் வகையில், இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 25ஆம் தேதி காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளாகும். எனவே, விஜயகாந்த்தின் சொந்த ஊரான மதுரையிலேயே அன்றைய தினம் மாநாட்டை நடத்துவதன் மூலம் தேமுதிகவினர் ஆதரவைப் பெற முடியும் என விஜய் கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநாட்டுக்கு காவல்துறையின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஜூலை 15ஆம் தேதியே இதற்கான கோரிக்கை மனுவை தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுப்பிவிட்டனர். ஆனால், ஆகஸ்ட் 27ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்தி எனக் கூறி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியாது எனச் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி தராமல் இழுத்தடிப்பதாகத் தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதால், தவெக மாநாட்டை ஆகஸ்ட் 21ஆம் தேதி அல்லது பிள்ளையார் சதுர்த்தி முடிந்த பிறகு நடத்துமாறு காவல்துறையினர் கூறியதை தவெக நிர்வாகிகள் ஏற்கவில்லை எனத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஏற்கெனவே தவெகவின் முதல் மாநாட்டுக்கு காவல்துறை 26 நிபந்தனைகளை விதித்ததாகத் தகவல் வெளியானது. தற்போது அக்கட்சி நடத்தும் இரண்டாவது மாநாட்டில் ஏறக்குறைய 15 லட்சம் பேர் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநாட்டுத் தேதியையே மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தவெகவினர் கூறுகின்றனர்.